Wednesday, December 14, 2016

மறந்து போன கேள்விகள்...



*** 

ஒரு 
நடிகையின் காதல் 

நடிகனின் 
அடுத்த படம்..

விலைவாசி உயர்வு 

விரைவில் நதி நீர் இணைப்பு 

இயற்கையின் சீற்றம்.. 
இல்லாமல் போன நிவாரணங்கள் 

விவசாயி தற்கொலைகள் 

ஆட்சியோ  
அல்லது 
தலைவர்களோ  -
அரசியலில்
அடுத்தடுத்து மாற்றங்கள் 

தினமொரு செய்தியுடன் 
முடிவில்லாத பயணம் 

ஒரு கேள்வியின் 
பதில் தெரியும் முன் 
அடுத்தடுத்த விவாதங்கள் ..

ஏதோ 
ஒரு பதில் கிடைக்கும் போது 
கேள்வியையே 
மறந்து போகும் 
மகா சனங்கள்...

இதோ 
மீண்டும் 
தேர்தலுக்கு 
நாடு தயார் ஆகிறதாம்...

ஏதோ ஒரு 
எதிர் பார்ப்பில் 
மக்களும் வறுமையும் 
காத்திருக்கின்றனர்...

-கலாப்ரியன் 

Thursday, October 13, 2016

இறைத்துகள்...

Image result for god particle


வாய் மூடி 
பேசாமல் 
வார்த்தைகளை அடக்குதல் 
மௌனமா??
சீறி எழும் 
எண்ணத்தை 
சீர் செய்து 
அமைதியாக்கல் 
மௌனமா??

ஏதோ ஒன்றை 
ஏற்றுக் கொண்டு 
மௌனமே 
என் மொழியாக்க 

சுற்றி எல்லாம் சுத்தமாய் 
சுத்தவெளி 
போலாக 

என்னுள்ளும் 
ஒரு 
பெரு வெடிப்பு 
சத்தமின்றி நடந்தது 

இறையைத் தேடிய 
என் பயணத்தில் 
இறைத்துகளை கண்டேன் 
நானே இறையாய் 
இப் பிரபஞ்சத்தில் 
ஓர் 
துகளாய் ..

வாழ்க வளமுடன்...

கலாப்ரியன் 

Wednesday, September 14, 2016

மனிதம்

Image result for tamilnadu beggar

உடலை உரித்து 
உயிரையே காய வைக்கும் போல
நல்ல வெயில் ...

கோடையின் கொடூரம்..

ஒரு
வயதான ஊனமுற்ற
பெரியவர்
சக்கரம் பொருத்திய
ஒரு பலகையில்...
கைகளில்
பழைய காலணியின் உதவியுடன்
தரையைத் தேய்த்து
மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தார்

கைகளில் வலு இல்லாததால்
கண்கள் நீர்த்துளியுடன்
யாசித்துக் கொண்டிருந்தது...

நெற்றியில்
ஒரு சிறு கருந்தழும்பு

இஸ்லாமியராக இருக்கலாம்...

சிறு
குறுந்தாடி..

எப்போதும் மடியில்
காணப்படும் ஒரு புத்தகம்
பைபிளோ, கீதையோ

அவர்
கிருத்தவரோ..  இந்துவோ...
எதுவாக இருக்கவும்
ஊகிக்க
காரணங்கள் இருந்தன..

ஆனால்
ஒன்று மட்டும் உறுதி

அங்கே
கடந்து சென்று கொண்டிருந்த
மனிதர்களில்
இந்த மதங்கள்
அனைத்தும் இருந்தன...

ஒருவரும்
முன் வராத நிலையில்
எங்கோ நின்று கொண்டிருந்த
ஒரு சிறுவன்
ஓடி வந்து
தன்னிடம் இருந்த
தின் பண்டத்தில்
பாதியைத் தந்தான்... சிரித்தான்...

மனிதம் என்பது
மதங்களிலும்
மனிதர்களிலும்
தேடப்பட்ட வேண்டிய ஒன்று...

ஆனால்

அது
குழந்தைகளிடம்
இரண்டற கலந்த ஒன்று

எல்லா மனிதர்களிடமும்
ஒரு
குழந்தை உள்ளம்
இருக்க வேண்டும்...

அது
நம்மை
இறைத்தன்மையுடன்
வாழ வைக்கும்...

வாழ்க வளமுடன்...

~கலாப்ரியன் 

Thursday, August 11, 2016

விதையாய் விழுவோம்




விதைகள் 
தங்களை 
வீசி எறிந்தாலும் 
அதை 
அனுபவமாக 
ஏற்றுக்கொள்ளுவதால் 
வளர்கின்றன 

அவமானமாகக்  
கொள்பவை 
புதைகின்றன...

வளர்வதும் 
புதைவதும் 
எறிபவன் 
கைகளில் இல்லை 

அவரவர்
எண்ணத்தில் தான் ...

வளர்வோம்...

வாழ்க வளமுடன் 

~கலாப்ரியன் 

Sunday, July 10, 2016

கொடை



தா 
எனக் கேட்டபின் 
தருவது 
அல்ல 
தானே 
முன் வந்து 
கொடுப்பதே 
கொடை..

கலாப்ரியன் ..

வாழ்க்கை



பிறந்தோம் 
வளர்ந்தோம் 
பெற்றதெல்லாம் 
அழித்தோம்
அழிந்தோம் 
என்பது 
மனித வாழ்க்கை

பிறந்து
வளர்ந்து 
பெற்றதெல்லாம் காத்து 
பின் வரும் 
மக்கட்கு அளித்து 
உடல் அழிந்தும் 
உயிர் வாழ்வது
மாமனிதர்களின் வாழ்க்கை 

பிறப்பெடுத்ததே 
பிறர்க்கெனத் தோன்றி   
பெற்றதெல்லாம் வேண்டாம் 
என்று
பற்று உடைத்து வாழ்ந்து 
மீண்டும் 
பிறப்பெடுக்கா வண்ணம் 
பிரிதல்
மகான்களின் வாழ்க்கை...

கலாப்ரியன்

Tuesday, June 21, 2016

ஈசன் தந்த தவமகள்



அள்ளி அணைத்து
ஆரத்தழுவும் கைகள்

விண்மீன் கூட பார்க்கக் கூசும்
மின்னுகின்ற கண்கள்

என் பேர் - சொல்லிச் சொல்லி
கொஞ்சி மகிழும் உதடுகள்

தளர்ந்து போகும் துன்ப நேரம்
என் உதடுகள்
தஞ்சமாகும் உன் கன்னங்கள்

மானோ இல்லை நீயோ என
துள்ளி மகிழும் கால்கள்

அணைக்கும் போது அகிலம் மறக்கும்
மேகப் பஞ்சுடல்

பார்த்துப் பார்த்து நான் மகிழும்
பத்தாம் பிறை..

இவள் இன்று
பகலில் ஒளிரும்
ஓர்
பவுர்ணமி

இரவி கூட
ஒளியை
இரவல் கேட்கும்..
இரவு நேரத்
தேவதை...

ஈசன் தந்த
பெருவரம்
இவள் என்
தாயாய்
வந்த
தவ மகள்...

நிலா வாழ்க வளமுடன் 

~கலாப்ரியன்


இல்லறம்

 
உலகின் முதன்மை ஆசிரியர் வள்ளுவரின் வழியே நான் இல்லறத்தைப் புரிந்து கொண்டது இவ்வாறுதான். இல்லத்தில் பெற்றோர், வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகள் என மூவர்க்கும் துணையாக இருக்கும் அறத்தைப் பேணினால், சாதாரண இல்வாழ்க்கை, இல்லற வாழ்வாகப் பரிணமிக்கும்.

" இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை"

இல்வாழ்வான் என்பதை ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவாக நாம் கொள்ள வேண்டும். கணவன் - மனைவியையும், மனைவி - கணவனையும், பெற்றோர் மற்றும் குழந்தைகள் என முப்பரிமாண (3 dimension) உறவினை நாம் காண வேண்டும்.

உழவுத் தொழில் உலகம் போற்றும் தொழிலாக இருப்பதன் காரணம் எத்துணையோ இருப்பினும், அது இல்லறத்தைப் பற்றி சொல்லும் ஒரு செய்தியால் எனக்கு மிகவும் பிடித்தது.

நெற்பயிர் நடவு  செய்வதைப் பார்த்தீர்களானால், நாற்றினைப் பிரித்து நடும் போது, சற்று இடைவெளியுடன் சீராக நடவு செய்வர். ஆனாலும் அந்த இடைவெளி ஒரே வரப்பிற்குள்ளே தான் அமைந்திருக்கும். இந்த வெளி, பயிர்களுக்கு ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழி வகுக்கும்...

பெற்றோர், நாம், நம் குழந்தைகள் என மூன்று வேறு கால கட்டங்களில் வளர்ந்த உறவுகளுக்கு இடையே இத்தகைய ஆரோக்கியமான இடைவெளி வேண்டும். இது சுதந்திரம் கூடிய உரிமையாகக் கொண்டு, அவரவர் சுதந்திரத்திலும், உரிமையிலும் ஒருவருக்கொருவர் குறுக்கீடு இல்லாமல் வாழ்தல் ஆரோக்கியம். 

திருமணத்திற்கு முன் ஒரு ஆணோ, பெண்ணோ தாங்கள் அனுபவித்த, ரசித்த விசயங்களை திருமணத்திற்குப் பின், சிறிது விட்டுக்கொடுக்க ஆரம்பிக்கின்றனர். ஓரிரு குழந்தைகள் என்று ஆனதும், அந்த விட்டுக்கொடுத்தலின் ஆழம் சிறிது அதிகரிக்கும். பின் தன் குழந்தையின் மகன், மகள் என்று வருகையில் விட்டுக்கொடுப்பதில் தம்மை அறியாமலே ஒரு முழுமை அடைய ஆரம்பிக்கின்றனர். இந்நிலை ஒருவகையில் துறவு நிலை தான். 

மீண்டும் வள்ளுவனின் மற்றோர் கோணத்தில் பாருங்கள்...

"யாதெனின் யாதெனின் நீங்கியன் நோதல் 
அதனின் அதனின் இலன்"

ஒருவன் எந்தப் பொருளில் இருந்து பற்று நீங்கிய வாழ்வை மேற்கொள்கிறானோ, அந்தப் பொருளில் இருந்து துன்பம் அடைவது இல்லை. இல்லறத்தில் முழுமைப் பெரு அடைய அடைய, பற்று என்பது குறைந்து, அது துன்பமற்ற துறவு வாழ்க்கைக்கு வழி செய்யும்.

மனிதர்கள் இல்லத்தில் மேற்கொள்ளும் அற வாழ்வு, அவர்களைத் துன்பத்தில் இருந்து விடுபட்ட துறவு வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் சிறந்த வழி.

 தனி மனிதன் தன்னுள் கொண்டு வரும் மாற்றங்கள் தான் குடும்பம், சுற்றம், சமூகம், நாடு என விரிவடையும். இது சான்றோர் வாக்கும் ஆகும்.

வாழ்க இல்லறம் .. வாழ்க வளமுடன் 

~கலாப்ரியன் 

கேட்பின் பெரிது கேள்



என் சிறுவயது காலகட்டத்தில் நான் என் வாழ்வின் "ஒரே" லட்சியம் என்று கொண்டிருந்த "பல" விசயங்கள் இப்போது நினைத்துப் பார்க்கையில் சிரிக்கத்தோன்றும் விசயங்களாக இருக்கிறது. 

Costly Bikes, MNC Job, Car, etc, etc., என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இப்போது என்னால் எளிதில் அடையாக் கூடியதாக இருப்பதால் ஒரு நகைப்பு. இது காலத்துடன் பொருந்தாமல் வாழும் மனப்போக்கின் அடையாளம்.

இப்போது என்னிடம் இருக்கும் பணம் பொருள் என பல விசயங்களைக் கொண்டு என் கடந்த காலத்தில் நான் வேண்டியதை மதிப்பீடு செய்வது சரியா? சிறு வயதில் இந்த வசதிகள் ஏதும் என்னிடம் இல்லாத காரணத்தால் தானே இவை யாவும் எனக்கு லட்சியங்களாகத் தெரிந்தது..? இது நிகழ் காலத்தில் இருந்து பின்னோக்கிய பார்வை..

இப்போது.. முன்னோக்கிய பார்வையை சிறிது சிந்திக்கலாம்...

இன்றிலிருந்து ஒரு 10 அல்லது 15 ஆண்டுகளுக்குப் பின் உங்களுக்கு என்ன வேண்டும் என சிந்தியுங்கள்... இலக்கு நிர்ணயம் செய்யலாம்.. Set A Goal...

நமது பின்னோக்கிய பார்வையில் கிடைத்த பாடத்தை மறந்து விடாதீர்கள். இன்றிலிருந்து 15 ஆண்டுகளுக்குள் நீங்கள் அடைய வேண்டிய இலக்காக நீங்கள் நினைப்பது, 15 ஆண்டுகளுக்குப் பிறகு நகைப்பிற்குரியதாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்... 

இதுதான் நமது முன்னோர் சொன்ன அறிவுரை - கேட்பின் பெரிது கேள்

நீங்கள் உங்களின் இன்றைய பலத்தைக் கொண்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு வேண்டியதை நிர்ணயம் செய்யாதீர்கள். ஏதோ ஒரு மிகப் பெரிய விசயமோ அல்லது செயலோ, உங்களிடம் தற்போது இல்லாத அல்லது உங்களால் இயலாத ஒன்றாக இருக்கட்டும். அதை நோக்கிய உங்களின் பயணத்தில் உங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

இமயத்தை நோக்கிய பயணம் மலையேறும் கலையை உங்களுக்கு எளிதாக்கி விடக்கூடும்.

இரு விளையாட்டு வீரர்கள், எதிர்வரும் போட்டிக்காகத் தயாராகி கொண்டிருந்தனர். 6 அடி 2 அங்குலம் உயரம் தாண்டுவது போட்டியின் இலக்கு. முதலாமானவன் இலக்கினைச் சரியாக கொண்டு கடும் பயிற்சியை மேற்கொண்டான். இரண்டாமவன் 6 அடி 5 அங்குலம் தன் இலக்காகக் கொண்டான். 

போட்டி நாள் - இருவரும் 6 அடி 2 அங்குலத்தை வெகு எளிதாகத் தாண்டினர். போட்டியின் விதி முறைப் படி, இலக்கு சிறுது அதிகரிக்கப்பட்டது... இப்போது 6 அடி 4 அங்குலம். வெற்றி யாருக்கு என உங்களுக்குத் தெரிந்திருக்கும். 

இலக்கு நிர்யணம் செய்வதில் நாம் இரண்டமானவன் போல இரண்டடி உயர்வான விசயங்களைக் கொள்வோம்.

வள்ளுவனை மீண்டும் நினைவு படுத்துகிறேன் ...

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற...                               

உங்களை விட வேறு எவரும் உங்களைப் பெரிதாகக் கொண்டாட முடியாது. திட்பமான மனதுடன் கேட்பது பெரிதாகவே இருக்கட்டும்.. விடா முயற்சியும், கடும் பயிற்சியும் வெற்றியைத் தேடித் தரும் - அது கண்டிப்பாக சிறியதாக இருக்காது...

வாழ்க வளமுடன்.

~கலாப்ரியன் 



Friday, June 17, 2016

தேடலின் எல்லை


தேடித் தேடி 
அலைந்திட வேண்டும் 

தேடலின் எல்லைகள் 
தெளிந்திட வேண்டும் 

தேடிய எல்லாம் 
தெரிந்து கொண்ட பின் 

தேடிய பொருளில் 
நிலைத்திட வேண்டும் ...

~கலாப்ரியன் 

மரியாதை



நம்மால் 
கொடுக்கப் படாத 
மரியாதைகளின் 

மதிப்பும் 
வலியும் ...

நமக்கு 
கிடைக்காத  போது 
புரிந்துவிடுகிறது...

~கலாப்ரியன் 

Friday, June 10, 2016

பலவீனம்



தன்
பலவீனத்தை
ஏற்றுக்கொள்ள
மறுப்பவன்
எத்தனை
பலசாலியாக இருந்தும்
பலன்  இல்லை

~கலாப்ரியன் 

விழிப்பு


      Girl Waking Up And Stretching In The Morning   Classroom Clipart
 இரவுக்குப் பின்
வரும்
எல்லா பகல்களும்
இறைவனால்
சமமாகவே
நிர்ணயிக்கப் படுகிறது
அதை
வரமாக்குவதும்
சாபமாக்குவதும்
அவரவர்
விழிப்புதான்
நிர்ணயம் செய்கிறது...

~கலாப்ரியன் 

வீடுகள்



விதைகள் இல்லை 
உரங்கள் இல்லை 
ஆனால் அதிசயம்...

விளை நிலம் 
எல்லாம் 
வீடுகள் 
முளைக்கும் 
அதிசயம்...

கலாப்ரியன் 

நல்ல காய்




நல்ல காய்களை 
எப்படிப்பா 
கண்டுபிடிக்க 
என்று கேட்டாள் 
என் செல்ல மகள் 

புழு 
இல்லாமல் பார்த்து 
வாங்கச் சொன்னாள் 
என் அம்மா 

புழு இருந்தால் 
நல்ல காய் 
என்று சொன்னாள் 
உன் அம்மா என்றேன் 

புரிந்தும் 
புரியாமலும் 
நின்றால் 
என் மகள்...


~கலாப்ரியன் 



புரிதல்



பிரிதலின் 
போதுதான்
நட்பிலும் 
உறவிலும் 
புரிதல் அதிகமாகிறது

~கலாப்ரியன் 

குலதெய்வம்




கோவிலில்
தந்தைகள்
தங்கள் மகள்களைத்
தோளில் தூக்கி
நிற்பது
மகளுக்கு
இறைவனைக்
காண்பிக்க அல்ல
இறைவனிடம்
தன்
குலதெய்வத்தைக் காண்பிக்கவே...

~கலாப்ரியன் 

முதல் தெய்வம்





கை எடுத்துக் கும்பிடுவார் 
கருத்தொன்று கொண்டிடுவார் 
பொய் பேசும் உதட்டாலே 
புகழ் மாலை சூட்டிடுவார்

உன் உயிரே என் உடலில் 
இயங்குதென ஏய்த்திடுவார் 
உன் பின்னால் போனதுமே 
உதட்டோரம் சிரித்துடுவார் 

சொல்லாத சொந்தமெல்லாம் 
பேர் கொண்டுச் சொல்லிடுவார் 
சொர்க்கமது என்னவென்றால் 
உன் சொந்தமோன்றே போதும் என்பார் 

விதி வந்து நாம் போகையிலே 
என் உயிரே போகுதென்பார் ...
நீருக்குள் மூழ்கிவிட்டு - நம் 
நினைவையும் சேர்த்தெரித்துடுவார் 

நல்லவரின் முகவரியை 
நான் உனக்குச் சொல்லிடுவேன் - கேள் 
நன்மை எல்லாம் ஓர் உருவில் - நம் 
அன்னையெனக் காண்கின்றேன்  ...

கருவான நாள் தொட்டு 
உருவான நாள் வரைக்கும் 
கலங்காமல் காத்திட்டாள் 
அவளே நம் முதல் தெய்வம் 

~கலாப்ரியன் 

குரு வணக்கம்





எண்ணையுடன் திரி போட்டு    
     ஏற்றி வைத்த தீபம் போல்
என் உயிரை ஏற்றி வைத்த
     வேதாத்திரி போற்றி

~கலாப்ரியன்

மனவளக்கலை



மனவளக்கலை...

பற்றதனைப் போக்கி விடும்
பக்குவம்   
வளர்த்து விடும்...
சித்தம் அழுக்காக்கும் சிந்தனையைச் 
சீர் செய்யும்.. 
வாழ்க்கை வளமாக்கும் 
வழியதனைத் தெளிவாக்கும்.. 

வித்தை பல 
சொல்லி வைத்த 
வேதம் அது புரியவில்லை.. 

இயற்கையிலே கிடைக்கும் - என
எழுதி வைத்த வள்ளல் - அவர் 
வேதம் 
சொல்லித்தந்த 
வேதாத்திரி மகான்... 

பொருள் தேடும் 
எனைத் திருப்பி 
அருள் தேட அருள் புரிந்த 
அருட்தந்தை...  

அவர் 
சொல்லித் தந்த சூத்திரம்தான் 
சொல்லிடுவேன் கேட்டிடுவீர்...
 
நெற்றியிலே பொட்டிருக்கும்
நினைவங்கே
நிறுத்திடுவீர்...

உச்சியிலே ஒளிதெரியும்
உயிர் அங்கே 
ஏற்றிடுவீர் ...

முட்டி வரும் 
சக்தியெல்லாம் 
விட்டம் அதைத் தொட்டுவிட்டால்..
மூலம் அதைப் 
பார்த்திடுவீர்.. 
மோட்சம் அங்கே பெற்றுடிவீர்..

பொருளதனைத் 
தேடித் தேடிப்
புறம் போக்காய்
வாழாமல் 
அருள் அதனைத் 
தேடுகின்ற 
அகத்தவமும் செய்துடுவீர்...

சுக்கிலத்தைத் 
தாதாக்கிச்...
சுந்தரனாய் வாழ்ந்திடவும்..
காயம்
காத்திடவும்  
காயகற்பம் 
கற்றிடுவீர்...

அப்பனைப் போல் 
காக்கும் அந்தக் 
காப்பதனைக் 
கற்றிடுவீர்.. 
எப்பொழுதும் நினைவினிலே 
சங்கல்பம் செய்திடுவீர்..

பத்தினியை வாழ்த்திடலாம் - பெற்ற 
மக்களையும் வாழ்த்திடலாம்..
உயிர்க்கலப்பாம் உடன் பிறப்பை 
ஒவ்வொன்றாய் வாழ்த்திடலாம் ...
சுற்றி வாழும் நண்பரையும்,
இடர் புரியும் எதிரியையும் ..
வற்றிவிடா இன்பமுடன் 
வாழ்க நீ வளமுடன் - என 
வாழ்த்தி நாமும் வாழ்ந்திடலாம்..

கற்றதெல்லாம் 
கற்றபடி 
சாதகமும் செய்து வந்தால் ..
மனக்கவலைத் தீர்த்திடலாம்
மனவளத்தைக் காத்திடலாம்..
சாதனைகள் செய்திடலாம்... 
வாழ்வே 
சாதனையாய் வாழ்ந்திடலாம்..

சமுத்திரத்தில் 
சில துளிதான் - நான் 
அறிந்தவற்றைச் சொல்லிவிட்டேன் 
அத்தனையும் பருகிவிட 
ஆழியாறு சென்றிடுவீர்...

வாழ்க வையகம் 
வாழ்க வையகம் 
வாழ்க வளமுடன்...!

~கலாப்ரியன்

முதிர்ச்சி

walking away from friendships

 உறவோ
பொருளோ
இழப்பதற்கு
முன்பே
அதன் பெருமையை
உணர்வதே
உண்மையான
முதிர்ச்சி

~கலாப்ரியன் 

Thursday, June 9, 2016

பத்தாம் பிறை..



மகள் ஒன்று வேண்டி - ஈசனை 
வரம் ஒன்று கேட்டேன் 
தானே வரமாய் - என் 
தாயெனப் பிறந்தான்... 

முடிமேல் ஒளிரும் பிறை போல் நெற்றி..
வில்லினை வளைத்துச் செய்திட்டப் புருவம்..
கயல் போல் மணியாய் இரு கரு விழிகள்..

விழிகள் காணும் காட்சிகள் எல்லாம்..
கவியாய் பேசும் செந்தளிர் உதடு..

தந்தத்தில் செதுக்கிச் செய்ததோ - இந்தக் 
கழுத்தினைக் காண்பீர் கண்ணிமைக்காமல்..

உடலின் அழகோ அசைவுகள் அழகோ..
மொழியெதும் இன்றிப் பேசிடும் அழகோ..

கண்கள் சிமிட்டிச் சிணுங்கிடும் அழகோ..
கைகளால் என் முகம் வருடிடும் அழகோ..

எல்லாம்  சேர்த்து எழுதிட வேண்டின்
எடுத்திடும் இன்னும் பல யுகம் எனக்கு..

ஐயிரு திங்கள் பெற்றவள் சுமந்து
அத்துணை அழகும் அளவுடன் சேர்த்து
பெற்றதே இந்த பெரு வரமென்பேன்.

ஈசன் உமையாள் இருவரின் அருளால்
தேய்வின்றி வளரும் பிறை இவள் தானே.. 

பத்தாம் மாதம் பக்குவம் அடைந்து - என் 
கைகளில் தவழும் 
பத்தாம் பிறையே...

~கலாப்ரியன் 

பராசக்தி


உண்ணும் போது உண்டும் 
    உறங்கும் போது உறங்கியும்  
செய்யும் தொழில் யாவும்  
   சித்தம் கொண்டு செய்வதும் 
 எண்ணும் எண்ணம் ஏகாந்த 
   நிலை அடைந்து வாழ்வதும்  
தெளிந்து விட்ட அறிவுடன் 
    முதிர்ந்த ஞானச் செறுக்கும் 
இவ்வுலக வாழ்க்கையை 
    இனிதாக்கும் இல்லறமும்
நான் வாங்கும் வரமனைத்தும்
    ஒன்றாகி உருவாகி 
மழலைஎனும் மகிழ்ச்சியாய்   
    தந்து விட வேண்டியும் 
என்போலே மகிழ்வுடனே 
   எனைச்சார்ந்த அனைவரையம்
அன்போடு அருள் பொழிந்து
    காத்திடவும் வேண்டியே 
தாழ்ந்தேன் நின்பதம் தொழுதேன்
    தாயே பராசக்தியே...!!

~கலாப்ரியன் 

எது சொர்க்கம்...




ஈன்றெடுத்த 
நொடி முதலில்
தன் மகவின் அழுகை
அன்னையின் சொர்க்கம் ...

அந்நொடி போய் 
அடுத்த நொடி - முதல் 
அழுகையின்றி சிரித்திருக்க 
அதுவே அவள்  
சொர்க்கம் என்றாள்

ஆற்றில் வரும் 
வெள்ளம் கண்டால் 
உளவு செய்த உள்ளத்திற்கு  
அதுவே சொர்க்கம் 

நட்டு வைத்த 
நாற்று எல்லாம் 
நங்கை போல்
நாணம் கொண்டால் - அந்த 
வெள்ளம் கொஞ்சம் 
தஞ்சம் கொண்ட
அணையே சொர்க்கம்..

கூட்டமாக இன்பமெல்லாம்
கூடி நின்ற போதிலும்
வாட்டம் கண்டு வயிறு - அது 
வாழைப்பழம் கூட 
சொர்க்கம் எனும்...

கல்வி கற்கும் 
கடமையெல்லாம் 
காலையிலே முடிந்து விட்டால் 
தொடர்ந்து வரும் 
மாலையில் 
தொல்லையின்றி விளையாட 
அதுவே சொர்க்கம்  

காதல் செய்த 
பெண்ணவளை
கைப்பிடித்தல் சொர்க்கம் - என
காதல் செய்து 
கண்டு கொண்ட
காளையவன் சொல்லட்டும்...  

கைப்பிடித்தப் 
பெண்ணவளை 
காதலித்துப் பாருங்கள் - உயிர்க் 
காற்று உள்ள 
காலம் மட்டும் 
காதல் உம்மைக்  
காதல் செய்யும் ...
காதல் உள்ள 
காலம் மட்டும் 
வாழ்க்கை 
அது 
சொர்க்கமாகும் ...!

கலாப்ரியன்.. 

மறு பிறப்பு















கடல் கடந்து செல்லும் யோகம் 
     என சோசியர் சொன்னார்.
படித்த படிப்பிற்க்கான பொருத்தமான வேலை 
    என பலரும் பாராட்டினர்.
கொழுத்த பணம் பண்ணலாம் -
   உறவினர்கள் ஒரு பக்கம்..!
காசுதான் காலத்தின் கட்டாயம் -என
   என் மனமும் மறு பக்கம்... !

கேட்டதை விட அதிக பணம்
    நினைத்ததை விட அதிக சுகம் 
கொஞ்ச நாள் மனத்தின் கூத்தாட்டம் ...
    நின்று போனது ஒரு நாள் எல்லாம்...
அன்பான மனைவி...  அவளது வளைகாப்பு ...
       ஷ்கைப்பின் உதவியால்.
 கண்ணீர் விடத்தெரியாத கணினி
      அவள் விசும்பல்களை மட்டும்  
என் காதில் சொன்னது.

பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும் 
     ஆயிரமாயிர மைல்களுக்கு அப்பால்
தனிமை மட்டும் நிசமென தெரிந்த பின் 
      சோசியர் சொன்னது யோகமா, சாபமா 
என மனதில் ஒரு பட்டிமன்றம்...
      உண்மை செயித்த போது 
என் ஊரின் அழுக்குத் தண்ணீரும், 
      மின்சாரம் இல்லாத இரவுகளும் 
சொர்க்கமென தோன்றின..
வேண்டியது எல்லாம் கிடைத்த பின்
    வேண்டாம் என சொல்கிற மனம்
அறிவின் குரல் ஒலிக்கும் போது 
    மனதின் இரைச்சல் அதை மறைத்து விட்டது 
மீண்டும் நாடு செல்லும் போது - எதிலிருந்தோ 
      மீண்டு செல்வது போல் தோணியது
இழந்ததை சரி செய்யும் முயற்சியில் புரிந்தது 
     நான் மீண்டும் பிறந்துவிட்டேன் ...

~கலாப்ரியன் 

அப்பா


நடை பயிலும் நேரம்
இன்னொரு காலாய்...

விளையாடும் நேரம்
எனக்குகந்த நட்பாய்...

துயில் கொண்ட நேரம்
தூங்காத விளக்காய்...

இருந்துவிட்டார் 
நிழல் போல
என்னருகில்
எந்நொடியும் ...

இப்பொழுது 
நான் வணங்கும் 
தெய்வமென 
மாறிவிட்டார்..

சுமந்தெடுத்த 
தாய் பத்து 
ஈடாக்க இயலாத 
அன்பெல்லாம் என்னதனாய் 
ஆக்கிவிட்ட என் மனிதர்..  

துன்பத்தின் போது
துவளாத வாழ்வை
தான் வாழ்ந்து உணர்த்திய 
உயர்வான 
முதல் குரு..

இருப்பை நீ 
உணர்த்துகிறாய் 
என் வெற்றி எல்லாம் 
உன் அருளாய்.. 

முப்பொழுதும் 
நினைக்கவில்லை... 
காரணம் 
உன்னை நான்
மறக்கவில்லை...

என் மகனாய் 
நீ வந்து 
பிறந்தாலும் 
பிறப்பெடுப்பாய்..
இன்னும் ஏழு 
சென்மத்தில்
உன் மகனாக 
வரம் கொடுப்பாய்.. 

காயம் துறந்து 
காற்றில் கலந்தாலும் 
என் உயிரில் இன்றும் 
உறைந்திருக்கும் 
இன்னொரு உயிர்...

அப்பா ..
என்றும்
உன் நினைவால்.. 

~கலாப்ரியன்

Wednesday, June 8, 2016

பிறப்பறுக்கும் பெரு வரம்

உயிரை மேலேற்றி 
எண்ணங்கள் 
நிலை கொண்டு 
எத்தனையோ 
தவம் இயற்றி 
சிவனே வா என்றேன் 

வந்தான் 

கேட்பது கேள் 
என்றான் 


பிறப்பை 
அறுக்கும் 
பெரு வரம் 
தா 
எனக் கேட்டேன் 

பற்றை அறு 
அது 
பிறப்பை அருத்தொழிக்கும் 
என்றான் ...

பற்றை அருப்பதென்றால் ???

என் கேள்வியின் 
பொருள் புரிந்தவன் 
மீண்டும் கூறினான்..

அன்பே ஆயினும் 
அது 
உன் மகளே ஆயினும் 
அதுவும் பற்றே 
என்றான் உறுதியாய்...

நொடியும் தாமதியாமல் 
நானும் அறுத்தேன் 
பிறப்பறுக்கும் 
வரத்தின் மேல் 
நான் கொண்ட 
பற்றினை... 

~ கலாப்ரியன் 

வலி

மனிதர்களுக்குப்
பெரும்பாலும்
தங்களின்
தோல்வியை விட
மற்றவர்களின்
வெற்றிதான்
அதிக வலியைத்
தருகிறது...

~கலாப்ரியன்

வெற்றியின் காதல்

தோல்விகளை 
நீ 
நேசிக்கக் கற்றுக்கொள் 
வெற்றி 
ஒருநாள் 
உன்னைக் 
காதல் செய்யும்.

~ கலாப்ரியன் 

சிரிப்பு மழை



































இவளின்
சிரிப்பு
மழையில் தான்
என்
இன்ப நதியின்
தோற்றம்
கரைகள் அற்ற
வெள்ளத்தில்
கரைகின்றன
என் துன்பங்கள்...

இறைவா
இன்னும் இன்னும்
வேண்டும்
இம் மழை ...

-
கலாப்ரியன்