உலகின் முதன்மை ஆசிரியர் வள்ளுவரின் வழியே நான் இல்லறத்தைப் புரிந்து கொண்டது இவ்வாறுதான். இல்லத்தில் பெற்றோர், வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகள் என மூவர்க்கும் துணையாக இருக்கும் அறத்தைப் பேணினால், சாதாரண இல்வாழ்க்கை, இல்லற வாழ்வாகப் பரிணமிக்கும்.
" இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை"
இல்வாழ்வான் என்பதை ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவாக நாம் கொள்ள வேண்டும். கணவன் - மனைவியையும், மனைவி - கணவனையும், பெற்றோர் மற்றும் குழந்தைகள் என முப்பரிமாண (3 dimension) உறவினை நாம் காண வேண்டும்.
உழவுத் தொழில் உலகம் போற்றும் தொழிலாக இருப்பதன் காரணம் எத்துணையோ இருப்பினும், அது இல்லறத்தைப் பற்றி சொல்லும் ஒரு செய்தியால் எனக்கு மிகவும் பிடித்தது.
நெற்பயிர் நடவு செய்வதைப் பார்த்தீர்களானால், நாற்றினைப் பிரித்து நடும் போது, சற்று இடைவெளியுடன் சீராக நடவு செய்வர். ஆனாலும் அந்த இடைவெளி ஒரே வரப்பிற்குள்ளே தான் அமைந்திருக்கும். இந்த வெளி, பயிர்களுக்கு ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழி வகுக்கும்...
பெற்றோர், நாம், நம் குழந்தைகள் என மூன்று வேறு கால கட்டங்களில் வளர்ந்த உறவுகளுக்கு இடையே இத்தகைய ஆரோக்கியமான இடைவெளி வேண்டும். இது சுதந்திரம் கூடிய உரிமையாகக் கொண்டு, அவரவர் சுதந்திரத்திலும், உரிமையிலும் ஒருவருக்கொருவர் குறுக்கீடு இல்லாமல் வாழ்தல் ஆரோக்கியம்.
திருமணத்திற்கு முன் ஒரு ஆணோ, பெண்ணோ தாங்கள் அனுபவித்த, ரசித்த விசயங்களை திருமணத்திற்குப் பின், சிறிது விட்டுக்கொடுக்க ஆரம்பிக்கின்றனர். ஓரிரு குழந்தைகள் என்று ஆனதும், அந்த விட்டுக்கொடுத்தலின் ஆழம் சிறிது அதிகரிக்கும். பின் தன் குழந்தையின் மகன், மகள் என்று வருகையில் விட்டுக்கொடுப்பதில் தம்மை அறியாமலே ஒரு முழுமை அடைய ஆரம்பிக்கின்றனர். இந்நிலை ஒருவகையில் துறவு நிலை தான்.
மீண்டும் வள்ளுவனின் மற்றோர் கோணத்தில் பாருங்கள்...
"யாதெனின் யாதெனின் நீங்கியன் நோதல்
அதனின் அதனின் இலன்"
ஒருவன் எந்தப் பொருளில் இருந்து பற்று நீங்கிய வாழ்வை மேற்கொள்கிறானோ, அந்தப் பொருளில் இருந்து துன்பம் அடைவது இல்லை. இல்லறத்தில் முழுமைப் பெரு அடைய அடைய, பற்று என்பது குறைந்து, அது துன்பமற்ற துறவு வாழ்க்கைக்கு வழி செய்யும்.
மனிதர்கள் இல்லத்தில் மேற்கொள்ளும் அற வாழ்வு, அவர்களைத் துன்பத்தில் இருந்து விடுபட்ட துறவு வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் சிறந்த வழி.
தனி மனிதன் தன்னுள் கொண்டு வரும் மாற்றங்கள் தான் குடும்பம், சுற்றம், சமூகம், நாடு என விரிவடையும். இது சான்றோர் வாக்கும் ஆகும்.
வாழ்க இல்லறம் .. வாழ்க வளமுடன்
~கலாப்ரியன்
No comments:
Post a Comment