Thursday, June 9, 2016

பத்தாம் பிறை..



மகள் ஒன்று வேண்டி - ஈசனை 
வரம் ஒன்று கேட்டேன் 
தானே வரமாய் - என் 
தாயெனப் பிறந்தான்... 

முடிமேல் ஒளிரும் பிறை போல் நெற்றி..
வில்லினை வளைத்துச் செய்திட்டப் புருவம்..
கயல் போல் மணியாய் இரு கரு விழிகள்..

விழிகள் காணும் காட்சிகள் எல்லாம்..
கவியாய் பேசும் செந்தளிர் உதடு..

தந்தத்தில் செதுக்கிச் செய்ததோ - இந்தக் 
கழுத்தினைக் காண்பீர் கண்ணிமைக்காமல்..

உடலின் அழகோ அசைவுகள் அழகோ..
மொழியெதும் இன்றிப் பேசிடும் அழகோ..

கண்கள் சிமிட்டிச் சிணுங்கிடும் அழகோ..
கைகளால் என் முகம் வருடிடும் அழகோ..

எல்லாம்  சேர்த்து எழுதிட வேண்டின்
எடுத்திடும் இன்னும் பல யுகம் எனக்கு..

ஐயிரு திங்கள் பெற்றவள் சுமந்து
அத்துணை அழகும் அளவுடன் சேர்த்து
பெற்றதே இந்த பெரு வரமென்பேன்.

ஈசன் உமையாள் இருவரின் அருளால்
தேய்வின்றி வளரும் பிறை இவள் தானே.. 

பத்தாம் மாதம் பக்குவம் அடைந்து - என் 
கைகளில் தவழும் 
பத்தாம் பிறையே...

~கலாப்ரியன் 

1 comment:

  1. வரிகளின் வீரியம் ,
    மனதை மண மேக கருவாக்கி,
    கண்களில் சந்தோஷ கண்ணீரை பிரசவித்தது...

    ReplyDelete