Sunday, December 15, 2019
Monday, November 18, 2019
Friday, October 11, 2019
ஆசை..!

கரையுடைத்து
ஊர் பார்க்க
கடலுக்குப்
பேராசை..!
கடலை எல்லாம்
பருகிவிட
சூரியனுக்கும்
ஓர் பேராசை..!
கரு மாறி.. உரு மாறி
காலமெல்லாம்
வாழ்ந்துவிட
மண்ணுக்கும் தான்
பேராசை..!
நாசி வழி
வந்து செல்லும்
காற்றுக்கும் ஓர்
ஆசையுண்டு ..
வாசியாக மேலேறி
வாசம் செய்யும்
பேராசை..
எங்குமுள்ள
விண்வெளியோ
என்னுள்ளே அறிவாக...
ஏதுமோர் ஆசையின்றி
இறையுறவாய் இருப்பதனால்..
என் அறிவை அறிந்து விட
எனக்கும்
ஓர் பேராசை..!
~கலாப்ரியன்
Thursday, October 10, 2019
அறியப்படாத வசந்தங்கள்...
ஆற்று நீர் குளியல்
ஆத்தங்கரை விளையாட்டு
மண்பானை சமையல்
மறுநாள்
நீர்மோறும் பழையசோறும்
பசித்த பின் தான் உணவு
அதுவும்
இரு வேளை மட்டும் தான்
ஆரோக்கியத்தைப் பாதுகாக்க
தேவையற்ற
தனி முயற்சி
எங்கு சென்றாலும்
நடைதான் ..
பெரும்பாலும்
கால்களே வாகனம்
நண்பர்களுடன்
அரட்டைக் கச்சேரி
தெருவோர மிட்டாய் கடை
காசிருந்தால் சர்பத்
இல்லையென்றால்
அடிபம்பு தண்ணீர்
மாலை முழுதும் விளையாட்டு
மங்கிப்போன வெளிச்சத்தில்
அக்காவுடன் வீட்டுப்பாடம்
எல்லாருக்கும்
ஓர் விரிப்பு
அம்மாவுக்குத் தலையணை இல்லை
எனக்கு மட்டும் அவளின் இடது கை
ஆழ்நிலையில் உறக்கம்
எதிர்பார்ப்புகளற்ற அடுத்தநாள்
மறுபடி ஓர் விடியல்
இப்போது தான்
புரிகிறது ..
இளமையில் இருந்தது
வறுமை அல்ல
அது
அறியப்படாத
ஒரு வசந்தம்..
~கலாப்ரியன்
Subscribe to:
Posts (Atom)





