Monday, April 8, 2019

பொருள் புதிது..

இளமையில் வறுமை எனும் தலைப்பிட்டு நான் சமர்ப்பித்த சிறுகதை, அமெரிக்காவில் தென்றல் மாதாந்திர பத்த்ரிக்கையில் ஏப்ரல் 2019 இதழில் பதிவாயிற்று ... தலைப்பு பொருள் புதிது என பதிப்பில் மாற்றப்பட்டுள்ளது...

http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12702




காலங்காத்தால எழுந்து ஒரு வாக் போறதுனா கேசவனுக்கு ரொம்பப் பிடிக்கும். லேசான ஈரமும், எதோ இனம்புரியாத வாசமும் கலந்து அது ஒரு மாதிரி சுகமான அனுபவம்.. அது மட்டுமில்லாம.. கூட்டம், தூசு, சர் சர்னு போற வாகன நெரிசல் எதுவும் இல்லாத, ஒரு நிம்மதியான நடை போடலாம்.

கடிகாரத்துல மணி அஞ்சுதாண்டி 2 நிமிசம் ஆச்சு.. இன்னிக்கும் காலைலயே கெளம்பியாச்சு. 

காலைல எழுந்ததும், முகம் கழுவி, கெளம்பிருவான்... திரும்ப வரப்ப, தெருமுனைல டீக்கடைல ஒரு டீ குடிச்சாதான் அவனுக்கு டே ஸ்டார்ட் ஆகும்.

"என்னங்க போறப்ப பைய எடுக்க மறந்துராதீங்க, ரெண்டு நாளா கண்ணன் பால் கொண்டு வரல, பாக்கெட் பால் வாங்கிட்டு வந்துருங்க".. சாரதா குரல் கேட்டு, போகும்போது சின்னதா ஒரு மஞ்சப்பை எடுத்துகொண்டான்... 

திருநெல்வேலி பக்கம் இலஞ்சி கேசவன் சொந்த ஊர், பதிமூணு வருஷம் சென்னைல தான் உத்யோகம்... சாரதாவுக்கு சொந்த ஊர் தென்காசி. கேசவன கல்யாணம் பண்ண பின்னாடிதான் சென்னை அறிமுகம், இப்பதான் மூணரை வருஷம் ஆச்சு.

கேசவனுக்கு முன்னாடி ரெண்டு அண்ணன், ஒரு அக்கா.. இவன் கடைக்குட்டி..  

அப்பா பரந்தாமனுக்கு நிரந்தரமான வேல இல்லாததால, இளமை காலம் கொஞ்சம் கஷ்ட ஜீவனம் தான், தினம் வயித்த நேரப்பறதே ஒவ்வொரு நாளும் போராட்டமாத்தான் இருக்கும். கேசவன் அப்பாவுக்கு செல்ல பிள்ளைன்றதால எவளோ கஷ்டம்னாலும்,இவனுக்கு மட்டும் முடிஞ்சவர கேட்டது கிடைச்சுடும்.. அம்மா சிவகாமி கொஞ்சம் கண்டிப்பான, சிக்கனமான பொம்பள... பிள்ளைங்கள அந்த கஷ்டத்துலயும் விடாம பள்ளிக்கூடம் அனுப்பினது, இப்ப வரை கேசவன் நன்றியோடு நினைச்சுக்கறது  உண்டு..

கஷ்டப்பட்டு படிச்சு, ஏதேதோ சின்ன சின்ன கம்பெனிகள்ல வேல பாத்து இப்போ ஒரு நல்ல சாப்ட்வேர் கம்பெனில ஒரு நல்ல பொசிஷன்ல உக்காந்தாச்சு... அண்ணா அக்கா எல்லாரும் ஊர்லயே நல்ல நிலைல செட்டில் ஆயிட்டாங்க ..

சின்ன வயசுல அப்பா கைய பிடிச்சு நடந்து  போறது வழக்கமான ஒன்னு... உற்சாகமா நடக்க சொல்லி கொடுத்தது அப்பா தான்.. 

ஒரு நாள் நடந்துகொண்டே பரந்தாமன் கேட்டார்..
"கேசவா, ஔவைப் பாட்டியோட பாட்டுலாம் சொல்லிக் கொடுத்தாங்களாடா பள்ளிக்கூடத்துல..",
"தெரிலப்பா" கேசவன் படிப்புல கெட்டிதான், ஆனாலும் இந்த கேள்விக்கு பொதுவான பதில் தெரியாம சமாளித்தான்.. 
"கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை.. அப்படினா என்னானு தெரியுமா" - மேல தொடர்ந்தார்  ..
"தெரியாதுப்பா.."  உதட்டை பிதுக்கினான் கேசவன்..
"சரி விடு, இப்ப சொன்னாலும் உனக்குப் புரியாது" - சின்னதா ஒரு சிரிப்புடன் அமைதியாக நடையை தொடர்ந்தார் .. அவர் நிழல் போல இவனும் தொடர்ந்தான்..

சென்னை வாழ்க்கை கொஞ்சம் அலுப்பு தட்ட ஆரம்பிச்சுடுச்சு கேசவனுக்கு.. அடிக்கடி ஊர் நியாபகம் தான்... இப்பகூட வாக்கிங் போறப்ப பழைய நினைவுகளை அசைபோட்டுட்டே போறது நல்லாத்தான் இருக்கு...

போரூர் சிக்னல் தாண்டி கொஞ்ச தூரம் போயிட்டு திரும்ப ஆரம்பித்தான் கேசவன்...  சிக்னல் தாண்டி வரிசையா காலைலயே பூக் கடைகள் எடுத்து வைக்கறதை பாத்த கேசவன், சாரதாவுக்கு புடிக்குமேனு கொஞ்சம் மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டான் .... வீடு திரும்ப நடக்க ஆரம்பித்தான்..

வாசல் கதவை தாண்டும் போதே, குழந்தை ஷிவானி அழுகை வீரியமாக கேட்டது... பதறிப்போய் ஓடினான் கேசவன்..

"வந்துட்டீங்களா, சீக்கிரம் பால் பாக்கெட்ட தாங்க, பசி தாங்காம அழ ஆரம்பிச்சுட்டா.."
"இவளை கொஞ்சம்வச்சுக்கோங்க " - குழந்தையை கைல கொடுத்து விட்டு.. "இந்த பால்காரன் திடீர் திடீர்னு வராம போய்டுறான், வேற ஏற்பாடு பண்ணனும்" புலம்பிக்கொண்டே பால் காய்ச்ச அடுக்களைக்குள் சாராதா சென்றாள்.

பசி தாங்காமல் ரொம்ப நேரம் அழுத்துருக்கும் போல, முகம் சிவந்து பொய் இருந்தது, இவனைப் பாத்ததும் ரெண்டு அரிசிப்பல் தெரிய சிரித்தது...
"ச்ச.. நாம கொஞ்சம் சீக்கிரம் வந்துருக்கலாமேனு" தன்னையே நொந்து கொண்டான் கேசவன்...
தவிர்க்க முடியாத சூழ்நிலைல குழந்தையோட பசியை நம்மால தாங்க முடியலையேன்னு நினைக்கும்போதுதான், அப்பா சின்ன வயசில் கேட்ட பாட்டோட அர்த்தம் இப்ப புரிஞ்ச மாதிரி இருந்தது..

இளமையில் வறுமை என்பது குழந்தைகளை விட, இயலாமையில் தவிக்கும் பெத்தவனுக்கு தான் வலி அதிகம் தரும் என்பது மாதிரியான அர்த்தத்தைத்தான் அப்பா சொல்லியிருந்துருப்பார் என நினைத்துக் கொண்டான்... அப்பாவின் போட்டோவைப் பார்த்தான், ஏனோ சிறிது மனசு வலித்தது ..

சாரதாவுக்கு வாங்கி வந்திருந்த பூவை அப்பாவின் படத்திற்கு போட்டு விட்டு திரும்ப, சாராதா எதோ புரிந்தும் புரியாததுமாக சிரித்துக்கொண்டே குழந்தையை வாங்கிகொண்டாள்..

பெரியவர்கள் சொல்லிவைத்ததுக்கு எல்லாமே மறைபொருள் ஒன்று இருக்கத்தான் செய்கிறது... கடவுள் போல... அதுதான் காலம் கடந்தும், நமக்கெல்லாம் பாடமாக இருக்க காரணமாகஇருக்கிறது போல ...

எதோ ஒரு நிறைவாக உணர்ந்தான்.. அப்பாவை நினைத்துக் கொண்டே, அந்த நாளைத் தொடங்கினான் கேசவன்...

நிலா.சுப்பிரமணியன் 

No comments:

Post a Comment