Friday, March 26, 2021

தொடரும் பயணங்கள்

விளக்கின்றி இருளில் 

நீண்டோடும் வீதிகள் 


நீரின்றி காய்ந்த 

தெருவோர குழாய்கள் 


சாதி இல்லை என்று சொல்லும் 

சாதிக்கட்சித் தலைவர்கள் 

 

நிலம் போலவே காய்ந்துபோன

விவசாயியின் வயிறுகள் 


நீதி இன்றி வாடும் 

நீதிமன்ற வாசல்கள் 


ஊதியம் போலவே 

முறைப்படுத்தப்பட்ட கையூட்டுகள் 


மீண்டும் ஒரு ஊழல் 

மீண்டும் ஒரு தேர்தல் 

மீண்டு வரும் தலைவர்கள் 


இங்கே 


ஊழலின் விதைகள் 

தலைவர்களிடம் இருந்தும்! 


ஊழலுக்கான உரங்கள் 

மக்களிடம் இருந்தும் !!


நாடு எங்கே செல்கிறது 

தெரியாமலே 

தொடரும் பயணங்கள்.

கலாப்ரியன்

Wednesday, March 24, 2021

 பேரறிவு


அறிந்து கொள்ளும் ஆவலில்  

தேடித்தேடி அலைகிறேன்  


பூட்டிய அறைக்குள்ளே 

சாவி அடைபட்டது போல 


தேடலின் எல்லை தொடும் முன் 

தேடும் பொருளிலே  - நான் 

தொலைந்தும்  போகிறேன்..


இங்கு அனைத்தும் ஒன்றாய் - அந்த 

ஒன்றே இங்கு அனைத்துமாய் 


என்னுள் எல்லாமுமாய் 

எல்லாவற்றிலும் நானாய் அறிந்தபின் 


நீயென்ன நானென்ன 

நீரென்ன காற்றென்ன 

கடலென்ன மலையென்ன 


அனைத்தும் நாமாய் 

அறிந்த அறிவே இங்கு 

பெரியதாய்...



கலாப்ரியன்

Friday, February 19, 2021

மகளதிகாரம் 7




பூக்கள்
எனும் தலைப்பில் 
ஓவியப்போட்டியின்  
தீர்ப்பு ..!

ஆறுதல் பரிசு 
மலர்களும் ..
முதல் பரிசு 
இவள் இதழ்களும் 
பெற்றன !!

கலாப்ரியன்