Tuesday, May 31, 2016

காலமும் ஞாலமும் ...




நம்மில் பல பேர் ஒரு விசயத்தில் ஒற்றுமை உள்ளவர்கள். எந்த ஒரு செயலையும் காரணமின்றி கால தாமதப்படுத்துவது தான் அது. ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை  procrastination என்பது இச்செயலைக் குறிக்கும்.

சோம்பேறித்தனம், நேர மேலாண்மையில் குளறுபடி என எத்தனையோ காரணிகள் இருக்கலாம். காரணம் எதுவாக இருப்பினும், ஒன்றை உணர்ந்து கொள்வது மிக முக்கியம், நாம் வீணாக்கும் ஒவ்வொரு நொடியும், நமது வெற்றி இன்னும் சற்று தொலைவுக்குப் போவது நிச்சயம் என்பதுதான்.

தும்மலின் போது நமது இதயம் ஒரு நொடி நின்று மறுபடி இயங்க ஆரம்பிக்குமாம், இதை நீங்கள் எப்போதாவது நினைத்தது உண்டா. இறைவன் நமக்குத் தேவையான ஒன்றைச் செய்வதில் எக்கணமும் காலம் தாழ்த்துவதில்லை என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம் எனக் கொள்ளலாம். ஒருவேளை இறைவன் சற்றே கால தாமதப்படுத்த விளைந்தால், விளைவுகள் உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதே இல்லை.

சிறிது சிந்தித்துப் பார்ப்போமேயானால், வாழ்க்கையில் வெற்றி பெற்ற அனைவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும், அவர்கள் தங்கள் பணிகளை வரிசைப் படுத்துவதிலும், காலம் தவறாமல் அதை நிறைவேற்றுவதிலும் சிறந்த கவனம் கொண்டிருப்பர். 

ஒரு சிறிய பயற்சியை செய்து பாருங்கள்... எவரும் உங்களை கேள்வி கேட்கப் போவது இல்லை, உங்களுக்குள் நீங்களே செய்து பார்க்கப் போகும் ஒரு சின்ன முயற்சி, எனவே உண்மையான விவரங்களைப் பட்டியலிடுங்கள்.

1. முதலில் ஒரு வெள்ளை காகிதத்தில் உங்களது குறுகிய கால (SHORT TERM) மற்றும் நீண்ட கால (LONG TERM) குறிக்கோள்களை (GOAL) எழுதிக்கொள்ளுங்கள். 

பிறகு...

2. உங்கள் குறிக்கோள்களை அடைவதற்குத் தேவையான செயல்கள், வரிசை, அவற்றை எந்தக் காலத்துக்குள் செயல் படுத்துதல் முக்கியம் என்பதை ஒருஅட்டவணையாகச் செய்து கொள்ளுங்கள். இது மிக மிக முக்கியம்.

மூன்றாவதாக... 

3. நீங்கள் தினமும் காலை எழுந்ததில் இருந்து, இரவு படுக்கைக்குச் செல்லும் வரை செய்யும் செயல்களை வரிசைப் படுத்துங்கள்.  

இப்போது உங்கள் குறிக்கோளை நோக்கி பயணிப்பதில் எத்துணை சதவீத வேலைகள் நீங்கள் தொடர்ச்சியாக செய்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். இரண்டு அட்டவணைகளும் ஒத்துபோகும் வரையில் இருப்பின் நமது வாழ்க்கை முறை, நோக்கமும் முயற்சியும் ஒரே பாதையில் இருப்பதாகக் கொள்ளலாம். இதில் முக்கியமான விசயம் நிர்ணயம் செய்யப்பட்ட காலத்திற்குள் செய்ய வேண்டிய வேலைகளை முடிப்பது என்பது தான்.

பெரும்பாலும், நாம் பொழுதுபோக்கும் விஷயங்கள், நமக்கு மிக தேவை என்றல்லாத விஷயங்கள் என்பவற்றில் அதிக நேரம் இருக்கின்றதா, எனில், நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.

procrastination என்ற விசயத்தை சரி செய்வது மிக சுலபம். 

நீங்கள் இன்று ஒரு விசயத்தில் தீர்மானமாக இருக்க வேண்டும். ஒரே ஒரு விஷயம், எது ஒன்று உங்களைக் தொடர்ச்சியாக எண்ணத்தில் வந்து தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது எனப் பாருங்கள். அதை தேர்ந்தெடுத்து இன்றே முடித்துவிட அல்லது தொடங்கியாவது விடுங்கள். ஒன்று முடிந்தவுடன், அடுத்த இலக்கு. சிறிது காலத்தில் பாருங்கள், உங்களை எண்ணத்தில் வறுத்தெடுக்கும் வேலைகள் என்பது முற்றிலும் காணாமல் போயிருக்கும். பின்பு எஞ்சியிருப்பது உங்கள் குறிக்கோளை நோக்கிய தடையற்ற பயணம் மட்டுமே.

மகாத்மா காந்தி அவர்கள் தனது ஒரு ரயில் பயணம் முடிவதற்குள் ஒரு புத்தகம் (ஹிந்த் ஸ்வராஜ்) எழுதி முடித்தார். இது அவர் நேரத்தின் அவசியத்தை உணர்ந்ததால் வந்த பயன். சாதித்தவர்கள் அனைவருமே தமது 40 வயதுக்குள் பெரும்பாலனவற்றை சாதித்தவர்கள் தாம். 

சாதிக்க பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை... கடமைகளை காலத்திற்குள் செய்தாலே போதும்... காலம் மீதியைப் பார்த்துக்கொள்ளும்.

நினைவில் கொள்ளுங்கள் 

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment